ஷா ஆலம், ஜனவரி 26 – உலு சிலாங்கூர், புக்கிட் தாகாரில் (Bukit Tagar) அமைக்கப்படவிருந்த பன்றி வளர்ப்பு பண்ணைத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அல்லது நிறுத்தி வைக்கப்படுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகள் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையைத் தொடர்ந்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற மாநில செயற்குழு (MMKN) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமிருடின் ஷாரி, விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) டத்தோ ஐர் இஷாம் ஹாஷிமிடம் மாற்று இடத்தைக் கண்டறியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புக்கிட் தாகார் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், அது உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்ற தவறான புரிதலால் மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
கோலா லங்காட், தஞ்சோங் சிப்பாட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்மொழியப்பட்டது.
இருப்பினும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க புதிய வழிமுறைகள் அல்லது மாற்று இடங்கள் கண்டறியப்படும் வரை இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
இத்திட்டமானது மிகப்பெரிய அளவிலான (Mega Project) ஒன்றல்ல என்றும், உள்நாட்டுத் தேவையில் 20 முதல் 30 விழுக்காட்டை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, புக்கிட் தாகார் பகுதியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்திருந்தார்.


