கோலாலம்பூர், ஜன 20- தேசம் ஊடகத்தின் தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தேசம் ஊடகம் சார்பாக இந்த விருது விழா எட்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இந்த விருது விழாவில் அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், வானொலி அறிவிப்பாளர்கள், சமூக சேவையாளர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த விருது விழாவில் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமானுக்குச் சமூக மேம்பாட்டுக்கான உருமாற்று தலைவர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
மேலும், அரசியல் பிரிவுகளில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாரகனுக்கும் உலு சிலாங்கூர் பிகேஆர் கட்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் அவர்களுக்கும் சிறந்த சேவைக்காக துணையமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் அவர்களுக்கு இளையோர் தலைமைத்துவ உருமாற்ற தலைவர் எனும் தேசம் ஊடகத்தின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அன்வாரின் சிறப்பு அதிகாரி திரு ஷண்முகம் மூக்கனுக்கு சமூகத்திற்கான தலைமைத்துவ ஐகோன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு ஆர்.யுனேஸ்வரன் விருது விழாவினை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
விருது விழாவின் முத்தாய்ப்பாக தேசத் தளபதி விருது நாட்டின் பத்தாவது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு அறிவிக்கப்பட்டு மிக விரைவில் அவரிடம் இந்த விருது ஒப்படைக்கப்படும் என்று தேசம் ஊடகத்தின் தோற்றுநர் திரு. குணாளன் மணியம் கூறினார்.

தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழாவில் கிட்டத்தட்ட 68 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகம், கலைத்துறை, அரசு சாரா இயக்கம், தமிழ்ப்பள்ளி, விளையாட்டுத்துறை என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதியில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தேசம் ஊடகத்தின் விருது விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் மாண்புமிகு ஆர்,யுனேஸ்வரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக தேசம் குணாளன் மணியம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தேசம் அனைத்துலக விருது விழாவினை வெற்றிப்பெற செய்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் குணாளன் மணியம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.



