கல்வி முறையில் மலாய் மொழி மற்றும் மலேசியா வரலாறு முக்கியத்துவம் பெற வேண்டும் - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தல்

19 ஜனவரி 2026, 8:55 AM
கல்வி முறையில் மலாய் மொழி மற்றும் மலேசியா வரலாறு முக்கியத்துவம் பெற வேண்டும் - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஜன 19: நாட்டின் புதிய கல்வி முறை தேசியக் கல்விக் கொள்கைக்கு (Dasar Pendidikan Kebangsaan) இணங்க அமைந்திருக்க வேண்டும் என்றும், தேசிய மொழியான மலாய் மொழிக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் தொடக்க விழாவில் உரையாற்றிய மாமன்னர், நாட்டின் எதிர்காலம், தேசக் கட்டமைப்பு மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் அடித்தளமாக கல்வி முறை தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஏதேனும் ஒரு புதிய கல்வி முறையை அங்கீகரிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டால், அவை மலாய் மொழியையும் மலேசிய வரலாற்றையும் ஒரு முக்கிய அங்கமாக ஏற்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“தேசிய மொழியான மலாய் மொழியை ஏற்க முடியாதவர்கள், மலேசியாவில் வசிக்காமல் இருப்பதே நல்லது,” என்று மாமன்னர் தமது உரையில் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பேணுவதற்கு தேசிய மொழி மற்றும் வரலாற்றின் மீதான புரிதல் அவசியம் என்பதை அவர் இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்.

நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் அது குறித்த விவாதங்கள் நாளை (ஜனவரி 20) தொடங்கி ஏழு நாட்களுக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மேலவை (Dewan Negara) கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி 13 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.