கோலாலம்பூர், ஜன 19- 15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலேசிய உருவாக்கத்தின் உண்மையான நோக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று நினைவுறுத்தினார்.
ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் மாநிலங்களுக்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பே நாட்டின் அஸ்திவாரம் என்பதை Baginda சுட்டிக்காட்டினார்.
1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் (MA63) அடிப்படையில் மலாயா, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மலேசியா உருவானது என்பதை வலியுறுத்திய மாட்சிமை தங்கிய பேரரசர், பிராந்தியங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியான முறையில் தீர்க்க வேண்டுமே தவிர, வெறுப்புணர்வை அல்லது சந்தேகத்தைத் தூண்டும் விதமாகச் செயல்படக்கூடாது என்று மாமன்னர் அறிவுறுத்தினார்.
மாநிலங்களின் உரிமைகள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பேரரசர், அதே வேளையில் மலேசியாவின் பொதுவான நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் தமது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.


