ஷா ஆலாம், ஜன 14- நாடெங்கும் நாளை (15.1.2026) பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் தமது நெஞ்சம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டுவும் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரியும் கை கூப்பி இன்முகத்துடன் தெரிவித்துக் கொண்டனர்.
தொன்று தொட்டு தொடரும் நமது முன்னோர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழா களில் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படும் பொங்கல் திருநாள் சூரியனை மையமாக வைத்து, அதிகாலையில் வாசலில் கோலமிட்டு தோரணங்கள் கட்டி, அருகருகே கரும்புகள் கட்டி வானில் கதிரவன் உதயமாகும் தருணத்தில் புது மண்பானையில் பசும் பால் ஊற்றி பொங்கல் வைப்பது மரபாகும்.
மண்பானையில் பால் பொங்கி வரும் வேளையில் இல்லத்தில் இருப்போர் அனைவரும் ஒன்று கூடி சுற்றி நின்று குலவையிட்டு ' பொங்கலோ பொங்கல்' என்று உரக்கக் கூவி தங்களது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு பொன்னான திருநாள் பொங்கல் என்றால் அது மிகையாகாது என்று அவர் கூறினார்.
மடாணி ஒருமைப்பாட்டு அரசின் விசுவாசமிக்க மனிதர்களாக இருக்கும் நாம் அனைவரும் மத நல்லிணக்கம் சகோதரத்துவம் சமத்துவம் சமரசம் ஒருமைப்பாடு ஆகிய நற்பண்புகளை ஆழமாக கடைப்பிடித்து வயலில் நெல் வளர்ந்து பின்னர் அரிசி வடிவில் நமக்கு உணவாக தொடர்ந்து அளிப்பது போன்று நம் அன்பையும் நேயத்தையும் அனைவரிடமும் பகிர்ந்து பொங்கல் திருநாளை இனிதே வரவேற்போம் என்று பாப்பா ராய்டு தமது பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


