ஷா ஆலம், ஜனவரி 13 — தேசியப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக, வன்முறையை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்தும் தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களை அரச மலேசியக் காவல்துறை (PDRM) தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதன் துணைப் தலைமைப் போலிஸ் அதிகாரி டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகள் மூலம் ஓர் "இஸ்லாமிய அரசை" நிறுவ முயன்ற 'ஜெமா இஸ்லாமியா' (JI) போன்ற பிராந்திய பயங்கரவாத அமைப்புகளால் மலேசியா உண்மையான மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"டிசம்பர் 2001 முதல், போலீஸ் உளவுத்துறை நடவடிக்கைகள் JI அமைப்பின் பிராந்திய கட்டமைப்பைக் கண்டறிந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
மதக் கோட்பாடுகளைத் தவறாகப் பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகளை JI நியாயப்படுத்தியது. இத்தகைய சித்தாந்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கும் மலேசியாவின் ஜனநாயக முறைக்கும் முற்றிலும் எதிரானவை," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"JI மற்றும் அல்-கொய்டா இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, உறுப்பினர்களைத் தீவிரவாதிகளாக மாற்றுவதிலும், தற்கொலைப்படை வீரர்களைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தது. பல முக்கிய நபர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்-கொய்டா முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள்," என்றார் அவர்.
வன்முறை மூலமாக மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் அரசியல் மாற்றத்தை அனுமதிக்கும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இது எதிரானது என்றும் அயோப் கான் வலியுறுத்தினார். மேலும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் மீண்டும் உருவாவதைத் தடுக்கவும், நாடு முழுவதும் அமைதியைப் பேணவும் உளவுத்துறை அடிப்படையிலான காவல் பணி மற்றும் ஏனைய முகமைகளுடனான ஒத்துழைப்பை அரச மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்துகிறது.


