ஷா ஆலம், ஜன 8: நேற்று இரவு கிள்ளானில் உள்ள தாமான் வாங்சாவில் உள்ளூர் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதிக்கப்பட்டவர் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் சைனி அபு ஹாசன் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நள்ளிரவு 12.30 மணியளவில் தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல் தலைமையகக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது,`` என தெரிவிக்கப்பட்டது.
"சம்பவ இடத்திற்கு வந்தவுடன், 43 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் உடலைக் காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர், உடனைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, தெற்கு கிள்ளான் (ஐபிடி), கொலைக்கான தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக முகமது சைனி மேலும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது விசாரணைக்கு உதவ 03-33762222 என்ற எண்ணில் தெற்கு கிள்ளான் மாவட்ட காவல் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


