ரெம்பாவ், ஜனவரி 5- நேற்று ஞாயிற்றுக்கிழமை ரெம்பாவ் வளாக மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யுஐடிஎம்) இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர்.
மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், இஸ்மாவானி ஹுஸ்னா இஸ்மாயில் (19) மற்றும் நூர் அய்ன் ஸுலைஸ்யா ஸஹ்ரைன் (19) ஆகியோர் தலையில் ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது என்று ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹசானி ஹுசைன் கூறினார்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், தகவல் மேலாண்மை டிப்ளோமா மற்றும் தகவல் தொடர்பு, ஊடக டிப்ளோமா மாணவர்களான இருவரும் யுஐடிஎம் ரெம்பாவ் பகுதியிலிருந்து லுபோக் சீனா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் தடம் புரண்டு இரும்புத் தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இருவரின் சடலங்களும் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.


