கூச்சிங், ஜனவரி 2 — இரண்டு நாட்களுக்கு முன்பு பூனையை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, நேற்று 38 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
ஜாலான் அஸ்தானாவில் உள்ள ஒரு சலவை நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அங்கு அந்த பூனை ஒரு மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கப்பட்டது என்றும் கூச்சிங் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்ஸன் நாகா சாபு தெரிவித்தார்.
ஜாலான் செமரியாங்கில் உள்ள ஒரு பேரங்காடிக்கு முன்னால் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். "ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேக நபருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டபோது அவருக்கு போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டதில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டது என்று அலெக்ஸன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 428 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








