ஷா ஆலம், டிச 24: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மேற்கொள்ளும் விலங்கு நல முயற்சியின் கீழ், அம்பாங் ஜெயாவில் உள்ள ஜாலான் கெர்ஜா ஆயர் லாமா பகுதியில் பூனைகளுக்கான தங்குமிடம் (Cat Shelter) கட்டப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பிஏஜே பூனை தங்குமிடம் திட்டம், விலங்கு நல தேவைகளுக்கும் சுற்றுச்சூழல் வசதிக்கும் ஏற்ற வகையில் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் தேவையான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படும்.
“இது தற்காலிக தங்குமிடமாக செயல்படுவதுடன், இந்த வசதி செல்லப்பிராணிகளின் நலனில் பொறுப்புணர்வையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும் நோக்கில் பொதுமக்களுக்கான கல்வி மையமாகவும் அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
“இத்திட்டம் சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, எம்பிஏஜேவின் கட்டிடம் மற்றும் கட்டிடக்கலைத் துறை, கட்டுமானப் பகுதியில் தள ஆய்வை மேற்கொண்டது,” என்று
எம்பிஏஜே தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த தள ஆய்வு, ஒவ்வொரு பொது வசதி திட்டமும் முறையான திட்டமிடலுடன் பயனுள்ளதாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இது சமூக நலனையும் விலங்கு நல மேலாண்மையையும் வலுப்படுத்தும் முயற்சிகளுடன் இணங்குகிறது.
“விலங்கு நலனுக்கும் சமூக நலனுக்கும் பயன் அளிக்கும் வகையில், இந்த திட்டம் நன்கு திட்டமிடப்பட்டும் திறம்படவும் செயல்படுத்தப்படும் என்பதை எம்பிஏஜே உறுதி செய்யும்,” என தெரிவிக்கப்பட்டது.


