ஷா ஆலம், டிச 2: கிள்ளான் பகுதியில் டிசம்பர் 3 முதல் 7 வரை ஏற்படவுள்ள கடல் பெருக்கு (air pasang besar) காரணமாகப், பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற நிலைமைகளை கவனமாகக் கண்காணித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.
மலேசிய வானிலைத் துறை மற்றும் தேசிய ஹைட்ரோகிராபி மையத்தின் கணிப்பின் அடிப்படையில், கடல் நீர்மட்டம் அதிகபட்சம் 5.2 மீட்டர் வரை உயரலாம் என கிள்ளான் மாவட்டப் பேரிடர் மேலாண்மை குழு தகவல் வெளியிட்டது.
இந்த நிகழ்வு கோலக் கிள்ளான் கடலோர பகுதிகளில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 4 (வியாழன்) முதல் 6 (சனி) வரை மூன்று நாட்கள் தொடர் உயர் நீர்மட்டம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 4: அதிகபட்ச கடல் அலை—5.2 மீட்டர் (சுமார் காலை 4.58)
- டிசம்பர் 5: அதிகபட்ச கடல் அலை—5.2 மீட்டர் (சுமார் காலை 5.46)
- டிசம்பர் 6: அதிகபட்ச கடல் அலை—5.2 மீட்டர் (சுமார் காலை 6.31)
மேலும், டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாலை நேரத்திலும் 4.5 முதல் 5.0 மீட்டர் வரையிலான உயர் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 6 மற்றும் 7 தவிர, இரவு நேரங்களில் பொதுவாக மழை இல்லாத நிலை நிலவும் என முன்கூட்டியே கூறப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை குழு, குறிப்பாக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்கூட்டியே மேற்கொள்ளவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெறும் காலத்தில், எந்த ஒரு தகவல் அல்லது அவசர உதவிக்கும், கிள்ளான் மாவட்டப் பேரிடர் இயக்க மையத்தை (DDOC) 03-33829292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



