சிலாங்கூர் வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,718 ஆக உயர்வு

28 நவம்பர் 2025, 6:10 AM
சிலாங்கூர் வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,718 ஆக உயர்வு

ஷா ஆலம், 28 நவம்பர்: சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலைத் தகவலின்படி, 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,718 பேர் மாநிலம் முழுவதும் செயல்படும் 16 தற்காலிக இடமாற்ற மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது நேற்றிரவு பதிவு செய்யப்பட்ட 2,603 பேரைக் காட்டிலும் அதிகமாகும்.

மாநில நலத்துறை வழங்கிய தகவல்படி, இந்த மையங்கள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்பட்ட கிள்ளான், கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படுகின்றன. அதே நேரத்தில், இன்று அதிகாலை மேற்கு கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய வெப்பமண்டல புயலால் பல இடங்களில் மழை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெள்ள அபாயம் இன்னும் கடுமையாக இருக்கும் வாய்ப்பு நிலவுகிறது.

நேற்று வழங்கப்பட்ட முன்னறிவிப்பில், இந்த புயல் பல மாவட்டங்களில் அதிக காற்று மற்றும் 24 மணிநேரத்தில் 200 மில்லிமீட்டரைத் தாண்டும் கனமழையை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டது. மலாக்கா நீரிணையில் உருவான இது முதல் வகை புயலாக பதிவாகியிருப்பதால், இதன் தாக்கம் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. தொடர்ச்சியான கனமழை மற்றும் மோசமான காலநிலை பல பகுதிகளில் நிலைத்து நிற்கும் ஆபத்து உள்ளது.

இந்த சூழலில், மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு அனைத்து அமைப்புகளும் தயார்நிலையை அதிகரித்துள்ளன. மொத்தம் 1,173 தற்காலிக மையங்கள் முழுமையான தயார்நிலையில் உள்ளன என்றும், அவை 2.44 இலட்சம் மக்களை வரை தங்க வைக்கத் தக்க திறன் கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், உடனடி உதவிகளை விரைவாக வழங்குவதற்காக 344 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள், அத்துடன் 227 மீட்பு படகுகள் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உதவி பொருட்கள் விநியோகம், மக்கள் இடமாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமின்றி நடைபெற முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.