கோலாலம்பூர், 27 நவம்பர்: சிலாங்கூர் மாநிலத்தின் பட்ஜெட் 2026 திட்டத்தில் கல்விக்கான ஆதரவு அதிகரிக்கப்பட்டிருப்பதைப் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் RM1,000 உதவித் தொகை, பாலர் பள்ளி குழந்தைகளின் உதவி மற்றும் மாநிலத்திற்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுத் தொகை ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
பூச்சோங்கில் வசிக்கும் ஷாலின் சேகர், கல்விக்கான இவ்வொதுக்கீடுகள் குடும்பங்களின் சுமையை குறைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு வழங்கும் RM1,000 உதவித் தொகை உண்மையிலேயே பெரிய உதவி. தற்போதைய செலவுகள் அதிகமாக இருக்கும் நேரத்தில், இப்படிப் பட்ட நிதி ஆதரவு பெற்றோர் மீது உள்ள அழுத்தத்தை குறைக்கும்,” என அவர் கூறினார்.
அத்துடன், அடுத்த ஆண்டில் 3,700 முன்பள்ளி குழந்தைகள் மாதாந்திர RM50 கட்டண உதவி பெறுவார்கள் என்பது பல b40 குடும்பங்களுக்கு மிகவும் தேவையான உதவியாக இருப்பதாக ஷாலின் குறிப்பிடுகிறார். “முன்பள்ளி கட்டணங்கள் குடும்ப வருவாயைச் சுருக்கிவிடும் நிலை இருக்கிறது. குழந்தைகள் அடிப்படை கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருக்கக் கூடாது. இந்த உதவி உண்மையில் சரியான திசையில் எடுத்த ஒரு முடிவு,” என்றார்.
மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த RM10 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார். “மாணவர்கள் சிறந்த வசதிகளுடன் படிக்க வேண்டும். உயர் கல்வி நிலையங்களை மேம்படுத்தும் இந்த நிதி, எதிர்கால திறமையான மற்றும் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க உதவும்,” என ஷாலின் தெரிவித்தார்.
கல்விக்கான இந்த ஒதுக்கீடுகள் மாநிலத்தின் மனித மூலதன வளர்ச்சிக்கான முக்கிய முதலீடாக பொதுமக்கள் மதிப்பிடுகின்றனர் என்றார் அவர்.








