ஷா ஆலம், நவ 17: முஸ்லீம் அல்லாதவர்களின் பிரேத மேலாண்மை தொடர்பான தொகுப்பை (package) சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்து, விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானவையாகவும் குடும்பத்தினர் செலுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும்.
இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினரும், புத்தம், கிறிஸ்துவம், இந்து, சிக் மற்றும் தாவோ மதங்களுக்கான நிர்வாகக்குழு (லிமாஸ்) தலைவருமான இங் ஸீ ஹான் கூறினார்.
“பொது கிரிமேட்டோரியம் (மயானம்/உடல் தகனம் நிலையம்) வசதிகள், அனைத்து தரப்பினரும், குறிப்பாக குறைந்த வருமானம் (B40) கொண்ட குழுவினர் நியாயமான கட்டணத்தில் தகன சேவைகளை பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.
“அதோடு, ஊராட்சி மன்றங்கள் (பிபிடி) தனியார் தரப்புகளுடன் இணைந்து, குடிமக்களுக்கு குறைந்த விலையிலான சேவைகள் வழங்க முயலும்,” என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.
செந்தோசா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய கிரிமேட்டோரியம் கட்ட தேவையான இடங்களை அனைத்துப் பிபிடிகளும் அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
“எனவே, ஏற்ற இடங்களை கண்டறியும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
“அக்டோபர் நிலவரப்படி, சிலாங்கூரில் எட்டு பொது கிரிமேட்டோரியம் உள்ளன. அவை ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, சிப்பாங், மற்றும் சுபாங் ஜெயாவில் (இரண்டு) உள்ள நிலையில் கோலா லங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் அவை கட்டுமானத்தில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
கைராட் டாருல் ஏஹ்சான் (KDE) திட்டம் மாநில அரசின் முக்கிய முன்முயற்சியாகும். இந்தத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் (OKU) 1,000 வெள்ளி பண உதவி வழகும். இது இறுதி சடங்கு நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.




