கோலாலம்பூர், நவ 12: மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு, விரிவாகவும் முழுமையாகவும் மேம்படுத்தப்படவுள்ளது. இதில், குறிப்பாக பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அடங்கும்.
மாநில நிர்வாகம் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து மற்றும் தேவைக்கேற்ப இயங்கும் வேன் சேவை (DRT) போன்ற வசதிகளை வழங்குவதில் மட்டும் இல்லாமல், வணிகப் பகுதிகளில் இணைப்பை வலுப்படுத்துவதிலும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் கவனம் செலுத்துவார்.
“நான் போதுமான ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்புகிறேன். பேருந்து மற்றும் வேன் சேவைகளை வழங்குவதில் மட்டும் அல்லாது, மேலும் பல வழித்தடங்களை உருவாக்க வேண்டும், ஏனெனில் இந்த முயற்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
“நாம் ஒரு விரிந்த அமைப்பை உருவாக்க விரும்புகிறோம். உதாரணமாக, ஒவ்வொரு இடத்தையும் இணைக்கும் வகையில். பாதசாரிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீடு போக்குவரத்து துறையை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறேன்,” என்று இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த ஆண்டில், மாநில அரசு ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து மற்றும் வேன் சேவைகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் பட்ஜெட் 2026, எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி மாநில சட்டமன்றத்தில் (DUN) மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சமர்ப்பிக்கப்படும்.
இதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கிடையில் சமநிலையை வலியுறுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.




