ஷா ஆலம், அக் 30 — உயிரியியல் துறையில் புதிய ஈடுபாட்டின் மூலம், சிலாங்கூர் மாநிலம் போட்டித்திறன் மிக்க மருத்துவ தொழில்நுட்ப மையமாக மாறும் திறன் கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில முதலீட்டு, வர்த்தகம் & இயக்கம் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றக்கூடிய உயர்மதிப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப துறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஜப்பானுக்கு மேற்கொண்ட தொடர் பயணங்களின் போது, உயர் தொழில்நுட்ப ரத்த வடிகட்டல் அமைப்புகள் மற்றும் இன்-விட்ரோ நோயறிதல் புதுமையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது, அதன் முடிவுகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலம், தொழில்நுட்ப பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் உயர் திறன் பணியாளர்களை உருவாக்குவதில் ஆழமாக ஆராயும் நோக்கத்தில் உள்ளது. உலகத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தை பிராந்தியத்தில் போட்டித்திறன் மிக்க, துடிப்பான மருத்துவ தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்த முடியும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இங் ஸீ ஹான் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட், செல்கேட், மற்றும் சென்ட்ரல் ஸ்பெக்ட்ரம் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜப்பான் பயணம் மேற்கொண்டனர்.




