SELANGOR

ஸ்ரீ மூடாவில்  இண்டா வாட்டர் கழிவு நீர் வடிகால் முறையை மாற்றிவிட கவுன்சிலர் ராமு வலியுறுத்து

24 ஜூன் 2025, 11:59 AM
ஸ்ரீ மூடாவில்  இண்டா வாட்டர் கழிவு நீர் வடிகால் முறையை மாற்றிவிட கவுன்சிலர் ராமு வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 24 - தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் கழிவுநீர் நீரை பொருத்தமான இடத்திற்கு திருப்பிவிடும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு இண்டா வாட்டர் குழுமம் (ஐ.டபள்யு.கே.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாமான் ஸ்ரீ மூடாவில் இரு இடங்களில் அமைந்திருக்கும் கழிவுநீர் வழித்தடங்கள் இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு  காரணமாக இருப்பது  அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

நீர் வடிகால் அமைப்பை மிகவும் பொருத்தமான இடத்திற்குத் திருப்பிவிடுமாறு நாங்கள் இண்டா வாட்டர் நிறுவனத்திடம்  கேட்டுக்கொள்கிறோம். மழை பெய்தாலும்  பெய்யாவிட்டாலும்  இண்டா வாட்டர் கழிவு நீரோட்டம் வேகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், மழை பெய்யும்போது நீரோட்டம் மிகவும் வேகமாக இருப்பதோடு குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைகிறது என்று நேற்று மாலை  பாடாங் தாமான் ஸ்ரீ மூடாவில் சிலாங்கூர் மீடியாவை சந்தித்தபோது அவர் கூறினார்.

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும்  வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கருத்துரைத்த ராமு, சம்பந்தப்பட்ட பணிகளை தாங்கள்  தொடர்ந்து கண்காணித்து வருவதாகச் சொன்னார்.

இதுவரை வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் அட்டவணையின்படி அது சீராக நடந்து வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு தகவலும் குடியிருப்பாளர்களின் தலைவருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. மேலும்,   தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று இப்பகுதி குடியிருப்பாளர் என்ற முறையில் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில்,  அதிகாலை 4.00 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் ஜாலான் கெபூன், கோத்தா கெமுனிங்,  ஷா ஆலம் மற்றும் கிள்ளானில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கோத்தா  கெமுனிங் பகுதியில் ஏற்பட்ட  திடீர் வெள்ளம் காரணமாக  100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் டேவான் ஆஸ்டரில் உள்ள ஒரு தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் புக்கிட் கெமுனிங், தாமான் கிரீன்வில்லே மற்றும் புக்கிட் கெமுனிங்கைச் சுற்றியுள்ள  லோட் நில குடியிருப்புகளும் அடங்கும். பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் நேற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.