பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23 - சுகாதார காப்புறுதிக்கான பிரீமியத்
தொகையைச் செலுத்த ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.)
இரண்டாவது கணக்கிலுள்ள பணத்தை பயன்படுத்த அனுமதிக்கும்
பரிந்துரை சேம நிதி வாரிய உறுப்பினர்களிடமிருந்து நேர்மறையான
கருத்தைப் பெற்றுள்ளது.
தற்போது குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக்
கட்டணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கிசிச்சைக்கான நிதிச்
சுமையைக் குறைப்பதில் இந்த திட்டம் துணை புரியும் என்று அவர்கள்
கூறினர்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தை வரவேற்ற தனியார் துறை ஊழியரான
இஸ்வான் கைருடின் (வயது 40), எனினும் காப்புறுதி நிறுவனங்கள் இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரீமியத் தொகையை நியாயமற்ற முறையில்
உயர்த்துவதைத் தடுக்க அந்நிறுவனங்கள் மீது அரசாங்கம் உரிய
கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
காப்புறுதி நிறுனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். காரணம் மருத்துவ
அனுகூலங்கள் குறைக்கப்படுகின்றன. ஆனால் பிரீமியத் தொகை
உயர்த்தப்படுகிறது என்றார் அவர்.
தற்போது தனியார் மருத்துவ செலவினங்கள் கடுமையாக உயர்வு கண்டு
வரும் நிலையில் அரசின் இந்த திட்டம் மிகவும் பொருத்தமான ஒன்று
என கைருள் நிசாம் ரோஸ்லி (வயது 47) தெரிவித்தார்.
நான் எனது ஏழு பிள்ளைகளுக்காக நான் 700 முதல் 800 வெள்ளி வரை
செலவிடுகிறேன். 18 வயதுக்கும் மேற்பட்ட ஐந்து பிள்ளைகளுக்கு மட்டும்
500 வெள்ளி வரை தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பொது மக்களுக்கு விரிவான அளவில் மருத்துவச் சேவை கிடைப்பதை
உறுதி செய்ய காப்புறுதி பிரீமியத் தொகையைச் செலுத்த இ.பி.எஃப். இரண்டாவது கணக்கிலிருந்து சேமிப்பைப் பயன்படுத்த அனுமதிப்பது
குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சு முன்னதாக
கூறியிருந்தது.


