ஷா ஆலம், ஜூன் 21 நேற்று கிள்ளான், மேருவில் ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு முன்னால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் காரில் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் குண்டர் குமபலின் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு உதவுவதற்கு ஏதுவாக வாக்குமூலம் பதிவு செய்ய பல நபர்களை காவல் துறை அழைத்துள்ளது என்று வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் கூறினார்.
சுயதொழில் செய்யும் பாதிக்கப்பட்ட நபர், பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பிய தனது நண்பருடன் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளையும் தனது தரப்பினர் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்த சம்பவம் குறித்து தமது தரப்பினருக்கு மாலை 3.37 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்ற போது 46 வயதுடைய உள்நாட்டு ஆடவர் இரத்த வெள்ளத்தில் காரில் சாய்ந்து கிடப்பதைக் கண்டதாகவும் விஜய ராவ் நேற்று கூறியிருந்தார்.








