கோலாலம்பூர், ஜூன் 17- இம்மாதம் 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற ஹாஷ்டேக் ஆசியா 2025 விருதளிப்பு நிகழ்வில் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்) நிறுவனம் தங்கம் மற்றும் வெண்கல விருதுகளை வென்றது.
சமூக ஊடகங்களில் ஆசியா முழுவதும் உள்ள நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்பை இந்த வருடாந்திர விருதளிப்பு நிகழ்வு அங்கீகரிக்கிறது.
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அதன் அவசரகால பதிலளிப்பு திட்டம் (இ.ஆர்.பி.) பிரச்சாரத்தின் மூலம் 'சிறந்த சமூக ஊடக நெருக்கடி மேலாண்மை' பிரிவில் தங்கம் வென்றது.
'சாயாங்' எனும் தலைப்பிலான ஆயர் சிலாங்கூர் 2024 கொண்டாட்ட வீடியோ பிரச்சாரத்தின் மூலம் சிறந்த சமூக ஊடக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகளுக்கான பிரிவில் வெண்கலம் கிடைத்தது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்ற இ.ஆர்.பி. விருது, சமூக ஊடகங்கள் வழி நெருக்கடி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஒரு அமைப்பு என ஆயர் சிலாங்கூரின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
இதற்கிடையில், சாயாங் எனும் 2024 கொண்டாட்ட வீடியோ பிரச்சாரம், மக்களுக்கு பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள தகவல்தொடர்புகளை வழங்குவதில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
இந்த பிரச்சாரம் சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி மற்றும் தேசிய தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான படைப்பு வீடியோக்கள் மூலம் மலேசியாவின் ஒற்றுமையின் உணர்வையும், கலாச்சார பன்முகத்தன்மையின் போற்றுதலையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த விருதைப் பெற்றதில் தாங்கள் மிகுந்த பெருமை கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சஃபியான் கசாலி கூறினார்.
தகவல்களை வெளிப்படையாக வழங்குவதில் எங்களின் திறனை இது நிரூபித்தது. எங்கள் பயனீட்டாளர்கள் தொடர்ந்து தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக எங்கள் சமூக ஊடக தளங்கள் மூலம் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் சமீபத்திய தகவல்களை தொடர்ச்சியாகப் புதுப்பிக்கிறது என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


