ஷா ஆலம், ஜூன் 17- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை
மாநில அரசின் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத்
திட்டத்தின் வாயிலாக 2,190 பேர் மருத்துவப் பரிசோதனையை
மேற்கொண்டுள்ளனர்.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் இதுவரை 15 சட்டமன்றத்
தொகுதிகளில் நடத்தப்பட்டுள்ள வேளையில் எஞ்சியத் தொகுதிகளில்
ஆண்டு இறுதி வரை தொடர்ந்து நடத்தப்படும் என்று பொது சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க 18
வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் 31 முதல் 45
வயது வரையிலானவர்களே இதில் அதிகம் கலந்து கொள்கின்றனர் என்று
அவர் சொன்னார்.
இந்த பரிசோதனையின் முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும்
பட்சத்தில் அல்லது குறிப்பிட்ட நோய்களுக்கான தொடக்க அறிகுறிகள்
தென்படும் பட்சத்தில் அவர்கள் அடுத்தக் கட்ட சோதனைக்காக
பொருத்தமான சுகாதார மையங்களுக்கு செல்ல பரிந்துரைக்கப்படுவர்
என்றார் அவர்.
வருகைக்கான முன்பதிவுகளைச் சரிபார்க்க செல்கேர் குழு
மருத்துவமனைகள் அல்லது செல்கேர் குழு கிளினிக்குகளைத் தொடர்பு
கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் பங்கேற்பாளர்கள் செலங்கா செயலி
வாயிலாக வருகைக்கான முன்பதிவுகளைச் செய்யலாம் என்று அவர்
ஆலோசனை கூறினார்.
நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சிலாங்கூர் சாரிங்
இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை 2025ஆம் ஆண்டு தொடர
மாநில அரசு 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


