SELANGOR

கல்வி வறுமையின் பிடியில் இருந்து குடும்பத்தை  விடுவித்து சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்- பாப்பாராய்டு

16 ஜூன் 2025, 5:45 PM
கல்வி வறுமையின் பிடியில் இருந்து குடும்பத்தை  விடுவித்து சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்- பாப்பாராய்டு
கல்வி வறுமையின் பிடியில் இருந்து குடும்பத்தை  விடுவித்து சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்- பாப்பாராய்டு

கோலாலம்பூர், ஜூன் 16-  குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவது கல்வியே என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

கல்வி ஒன்றே வாழ்வின் ஜீவநாடியாக விளங்குவதால்

கல்வியில் முன்னேற்றம் காண விரும்பும் மாணவர்கள் நேரந்தவறாமை உட்பட கட்டொழுங்கை பின்பற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

வீட்டுப் பாடங்களை சரியான நேரத்தில் செய்து முடிப்பது, தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்வது உட்பட குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும் மனப்போக்கை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

இங்குள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டிலான எஸ்பிஎம் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

அர்ஜூனா வியூகம் ‘ எனும் இக்கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து சுமார் 450 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

இக்கருத்தரங்கின் நிறைவில் வீ. பாப்பாராய்டு பி40 மாணவர்களுக்கான ஸ்ரீ முருகன் நிலையத்தின் இலவச கல்வி திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்நாட்டில் கல்வி வாயிலாக மட்டுமே இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனையில் 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா அவர்களால் தொடங்கப்பட்ட ஓர் உன்னத முயற்சியே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

கடந்த 43 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கி இந்திய சமுதாயத்தில் கல்விமான்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருந்துள்ளது.

“கல்வியோடு, இறை நம்பிக்கை, கட்டொழுங்கு ஆகியவற்றையும் விதைத்து பிறர் மதிக்கும் உன்னத பண்பு நிறைந்த மாணவ செல்வங்களை உருவாக்கி வரும் இந்த நிலையத்தின் முன்னாள் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் “என்றார் அவர்.

இந்திய மாணவர்களை வெற்றிப் பாதைக்கு வழிகாட்டுவதில் இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா, தேசிய கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ், குகனேஸ்வரி, அசோக் வேலு, ராஜேஸ் உள்ளிட்ட இளைஞர் படையினரின் ஆக்கப்பூர்வ ஈடுபாடு பாராட்டுக்குரியது என்றார்.

பி40 மாணவர்களை கல்வி வாயிலாக உயர்த்த வேண்டும் என்ற தனது இலட்சிய திட்டத்திற்கு ஏற்ப இக்கருத்தரங்கில் பங்கேற்ற இப்பிரிவு மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி வாயிலாக இந்தியர்களை வறுமையில் இருந்து விடுபடச் செய்யும் முயற்சியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பி 40 மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பொருட்டு அரசாங்கத்தின் ஈ-காசே தரவு பட்டியலில் வறுமை கோட்டின் கீழ் பதிவு பெற்ற இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தாங்கள் இலவச கல்வியை வழங்குவதாக இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் ஶ்ரீ முருகன் நிலையங்களில் ஈ-காசே பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி படிப்பு முடியும் வரையில் இலவசமாக கல்வி கற்கலாம் என்றார் அவர்.

அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்குகள், சிந்தனைத் திறன் பட்டறைகள், தன்முனைப்பு பயிற்சிகள், கையேடுகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

கல்வியைப் பிரதானமாகக் கொண்டு ஶ்ரீ முருகன் நிலையம் கடந்த 43 ஆண்டுகளாக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி பயணத்தின் புதிய புரட்சியாக ‘ஜீரோ பி40’ திட்டத்தை இந்நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஶ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் படையைச் சேர்ந்த தொண்டூழியர்கள் தனது தலைமையில் இந்த குடும்பங்களை நேரில் சந்தித்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி வருவதாக அவர் விவரித்தார்.

வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட  ஷா ஆலாமைச் சேர்ந்த தேசன் த/பெ திருச்செல்வம் எனும் 5ஆம் படிவ மாணவர் ‘ஜீரோ பி40’ இலவச கல்வி திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை சுரேன் சுட்டிக் காட்டினார்.

‘ஜீரோ பி40’ இலவச கல்வி திட்டம் தொடர்பாக இந்திய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை 011-1122 9464 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி சுரேன் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.