SELANGOR

ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறும் 10 மாணவர்களுக்கு  தலா வெ.1,000 உதவி நிதி-அமைச்சர் நான்சி தகவல்

10 ஜூன் 2025, 3:15 PM
ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறும் 10 மாணவர்களுக்கு  தலா வெ.1,000 உதவி நிதி-அமைச்சர் நான்சி தகவல்

புத்ராஜெயா, ஜூன் 10 - கிரிக்கில் நேற்று  நிகழ்ந்த கோர சாலை  விபத்தில்  சிக்கி பேராக்கில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) சிகிச்சை பெற்று வரும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தை (உப்ஸி) சேர்ந்த 10 மாணவர்களுக்கு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு  தலா 1,000 வெள்ளியை உடனடி உதவியாக வழங்கும்.

இது தேசிய நல அறக்கட்டளை மூலம்  'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கருணை உதவித் திட்டம்'  மூலம்  வழங்கப்படும் நன்கொடையாகும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

அவர்களில் எட்டு பேர் தைப்பிங் மருத்துவமனையிலும் இரண்டு பேர் ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்  என்று அவர்  தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டப் பின்னர்  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.

மேலும்,  விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு உளவியல் ரீதியாக உதவ சான்றளிக்கப்பட்ட ஆலோசகர்களை கொண்டு ஆலோசக சேவையை  வழங்குவது உட்பட பல்வேறு அம்சங்களில் வழங்கக்கூடிய உதவி மற்றும் ஆதரவின் வடிவங்களையும் தனது தரப்பு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்

கிரீக், கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை  பெரேடுவா அல்ஸா  வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் போது அந்த  வாடகைப் பேருந்து திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.