ஷா ஆலம், ஜூன் 4:- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை உதவி ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
பாதிக்கப் பட்டவர்களின் வீடுகள் முழுமையாக சீர் செய்யப்படும் வரை அவர்களின் தற்காலிக தங்குமிட வசதிக்காக மாதம் 2,000 வெள்ளி தொடர்ந்து வழங்கப்படும் என்று டத்தோ பொர்ஹான் அமான் ஷா சொன்னார்..
குடியிருப்பின் ஒரு பகுதி சேதமடைந்தவர்களுக்கு அவர்களின் வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை உதவி தொடரும். இதற்கு ஏழு அல்லது எட்டு மாதங்கள் வரை ஆகலாம். சிறிதளவு சேதமடைந்த வீடுகள் பழுது பார்க்கப்பட்டு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு குடிபெயர்ந்த பிறகு உதவி நிறுத்தப்படும்.
ஆகவே, உதவி வழங்குவதை எளிதாக்கும் வகையில் அனைத்து வீடுகளையும் பழுது பார்ப்பது தொடர்பான ஒவ்வொரு செயல் முறையையும் நாங்கள் பார்ப்போம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை செலவுகளுக்கு 40 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மொத்தம் 313 பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை உதவியைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள தொகை விரைவில் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
பாதிக்கப் பட்டவர்கள் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவது உட்பட ஆவணச் சிக்கல்கள் காரணமாக 100க்கும் மேற்பட்டவர்கள் வாடகையை இன்னும் பெறவில்லை. அவை முதலில் சரிபார்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படும் என்பதோடு அவர்கள் வழக்கம் போல் தங்கள் வாழ்க்கையை தொடர்வதை உறுதி செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் கூறினார்.
பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தீ 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு எழுந்தது. தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


