SELANGOR

நகைக்கடை உரிமையாளரைக் கடத்திய கும்பலுக்கு மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்  பொருள் கடத்தலில் தொடர்பு

28 மே 2025, 9:49 AM
நகைக்கடை உரிமையாளரைக் கடத்திய கும்பலுக்கு மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்  பொருள் கடத்தலில் தொடர்பு

கோத்தா பாரு, மே 27: தும்பாட், பலேக்பாங்கில் அண்மையில்   நகைக் கடை உரிமையாளருக்கு எதிரான  கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் நடவடிக்கையில்  ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  நான்கு சந்தேக நபர்கள் மாநிலத்தில்  தீவிரமாகச் செயல்பட்டு வந்த குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நம்புகின்றனர்.

இந்தக் கும்பல்  நீண்ட காலமாக மாநிலம் முழுவதும் குற்றச் செயல்களில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளதோடு  பல நபர்களை குறிவைத்து  மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக நம்பப்படுகிறது என்று  கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமதுஹ யூசோப் மாமாட் கூறினார்.

அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதுகாப்புப் பணத்தைக் கேட்பதும் இதில் அடங்கும் என அவர் சொன்னார்.

இந்தக் கும்பல் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பிற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதோடு அண்டை நாடுகளில் உள்ள குற்றவியல் கும்பல்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது  என்று அவர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் முதல் அமல்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய தடையைத் தொடர்ந்து காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கை காரணமாக அண்டை நாட்டிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருளுக்கு பணம் செலுத்துவதில் இக்கும்பல்  சிரமங்களை எதிர்நோக்கியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று முகமட் யூசோப் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,  சந்தேக நபர்களுக்கு பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்த வேண்டியுள்ளதால் இச்சம்பவம் நிகழ்ந்தது என்ற அனுமானம் உட்பட இவ்வழக்கு தொடர்பில் வெளியிடப்படும்  உறுதி செய்யப்படாத அறிக்கைகளை எளிதில் நம்ப வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

ஆதாரமற்ற விஷயங்களைப் பகிராதீர்கள். காவல்துறை விசாரணை நடத்தி இந்த வழக்கை விரைவில் தீர்க்க வழிவிடுங்கள்  என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட கும்பல் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் பறித்து வந்ததாக நம்பப்படுவதாகவும் சமீபத்தில் அவரிடமிருந்து 80 கிலோகிராம் தங்கத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியதாகவும் இதன் மதிப்பு சுமார் 4 கோடி வெள்ளி  என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.