ஷா ஆலம், மே 24 - தொழிலாளர்களின் தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் கப்பார், மேரு மற்றும் தெலுக்கோங்கில் மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அந்த விடுதிகள் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ஸாரி அபெண்டி முகமது ஆரிப் தெரிவித்தார்.
தற்காலிக தொழிலாளர் குடியிருப்புகள் (டிஎல்கியு) மற்றும் 10 மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகள் (சிஎல்கியு) கட்டுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட 213 திட்டமிடல் அனுமதி விண்ணப்பங்கள் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு வசதியான தங்குமிடத்தை வழங்குவதற்கான பொறுப்பை முதலாளிகளும் உற்பத்தியாளர்களும் கூட்டாக ஏற்றுக்கொள்வதைக் காண மாநகர் மன்றம் விரும்புகிறது.
வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முழு வசதிகளுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் விடுதிகளைத் திட்டமிடுவது மற்றும் நிர்மாணிப்பது உகந்த மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட தொழில்துறை பணி கலாச்சாரத்தை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற டிஎல்கியு மற்றும் சிஎல்கியு 'டீச்-இன்' அமர்வில் பேசிய ஸாரி, இத்தகைய தங்குமிடங்களை நிறுவுவதன் மூலம் கடை அலுவலகங்கள் மற்றும் மாடிகள் தற்காலிக தொழிலாளர் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் என்று மேலும் கூறினார்.
தற்போதுள்ள கடை அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இன்னும் தற்காலிக தொழிலாளர் தங்குமிடங்கள் செயல்பட்டு வந்தால் அதற்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அனைத்து அங்கீகரிக்கப்படாத தற்காலிக தொழிலாளர் தங்குமிடங்களுக்கும் எதிராக அமலாக்க நடவடிக்கைகள் தொடரும். மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் விடுதி நிர்மாணிப்பு நிறைவடையும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


