SELANGOR

இ.கே.வி.இ. நெடுஞ்சாலையின் முதல் பிரிவு ஜூலை மாதம் திறக்கப்படும்

20 மே 2025, 4:55 AM
இ.கே.வி.இ. நெடுஞ்சாலையின் முதல் பிரிவு ஜூலை மாதம் திறக்கப்படும்

ஷா ஆலம், மே 20 - சுங்கை லோங்கை அம்பாங்கையும்  இணைக்கும் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (இ.கே.வி.இ.) முதலாவது பிரிவு வரும்   ஜூலை மாதம் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை திறக்கப்படுவதன் வழி  பண்டார் சுங்கை லோங் மற்றும் பண்டார் மக்கோத்தா செராஸ் பகுதிகளில் நிலவும்  போக்குவரத்து நெரிசல் சீராகும்  என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாரெட்சன் ஜோஹான் கூறினார்.

திட்ட மேம்பாட்டு அறிக்கையின்படி, பிரிவு 1 இல் வெளிப்புற கட்டுமானப் பணிகள்  இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  பாதுகாப்பு ஆய்வை அடுத்த மாதம்  மேற்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

நெடுஞ்சாலையின் இந்தப் பகுதி நிர்ணயிக்கப்பட்ட  காலக்கெடுவுக்குள்  திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கட்டுமானப் பணிகளின் மேம்பாட்டை நான் கண்காணிப்பேன் என்று ஷியாரெட்சான் முகநூலில் வெளியிட்ட  ஒரு பதிவில் தெரிவித்தார்.

அம்பாங்கை யுகே பெர்டானாவுடன் இணைக்கும் இந்த இ.கே.வி.இ.   நெடுஞ்சாலையின் 2ஆம் பிரிவு  76 விழுக்காடு நிறைவை எட்டியுள்ள வேளையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அது முழுமையாக பயன்பாட்டிற்கு  வரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இ.கே.வி.இ. என்பது கிரேட்டர் கோலாலம்பூரில்  உள்ள ஒரு வளைந்த வடிவ சாலையாகும். இது 24 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு நெடுஞ்சாலையாகவும், பின்னர் 12 கிலோமீட்டர் நீளத்திற்கு துணைச் சாலையாகவும் நீண்டுள்ளது.

கோலாலம்பூர் நகர மையத்திற்குள்  நுழையாமல் செல்லும் இந்த சாலை  மத்திய சுற்றுச்சாலை  2க்கு (எம்.ஆர்.ஆர்.2) மாற்றாக செயல்படுகிறது. இதன் வழி போக்குவரத்து நெரிசல் குறைவதற்குரிய  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.