ஷா ஆலம், மே 18- மாநிலத்திலுள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத
தலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு இவ்வாண்டு
12 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் சமய
நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் அந்த நிதி ஆலயங்கள்,
தேவாலயங்கள், பௌத்த ஆலயங்களுக்கு வழங்கப்படுவதாக லீமாஸ்
எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய
சிறப்பு செயல்குழுவின் இணைத் தலைவர் இங் ஸீ ஹான் கூறினார்.
மாநிலத்தின் மேம்பாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பும் இடமும்
வழங்கப்படுவதை உறுதி செய்யும் மாநில அரசின் கடப்பாட்டின் ஒரு
பகுதியாக இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அமைதியான, ஒற்றுமையான மற்றும் பரிவுமிக்க மாநிலமாக சிலாங்கூர்
விளங்குவதை உறுதி செய்யும் வகையில் சமூகத்தில் உயரிய நெறிகளை
விதைக்கக்கூடிய சமூக நடவடிக்கைகளை மாநில அரசு தொடரும் என
அவர் உறுதியளித்தார்.
அனைத்து முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கும் வருடாந்திர
மானியம் வழங்கும் சிறப்பான திட்டத்தை மாநில அரசு கடந்த 2009ஆம்
ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்தகைய வழிபாட்டுத் தலங்களுக்கு
தொடர்ந்து உதவி வழங்கும் மாநில அரசின் கடப்பாட்டை நான்
மறுவுறுதிப்படுத்துகிறேன் என்றார் அவர்.
மாநில அரசு முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 60 லட்சம்
வெள்ளியை ஒதுக்கீடு செய்து வருகிறது. அவற்றில் 36 லட்சம் வெள்ளி
பௌத்த மற்றும் தாவேஸிய வழிபாட்டுத் தலங்களுக்கும் 17 லட்சம்
வெள்ளி இந்து ஆலயங்களுக்கும் எஞ்சியத் தொகை தேவாலயங்கள்
மற்றும் சீக்கிய ஆலயங்களுக்கும் வழங்கப்படுகின்றன.
நேற்று, எல்மினாவிலுள்ள மகா கருணா விஹாரா பௌத்த ஆலயத்தில்
மாநில அளவிலான விசாக தினக் கொண்டாட்டத்திற்கு தலைமையேற்று
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


