ஷா ஆலம், மே 15 - உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த வெளிநாட்டினருக்குச் சொந்தமான மூன்று வர்த்தக வளாகங்களை மூடுவதற்கான உத்தரவை கோல சிலாங்கூர் நகராட்சி மன்றம் (எம்.பி.கே.எஸ்.) வெளியிட்டது.
மாவட்டத்திலுள்ள வெளிநாட்டு வர்த்தக வளாகங்களுக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மூன்று குற்றப் பதிவுகளையும் வளாகத்தின் வணிக உபகரணங்களைப் பறிமுதல் செய்வதற்கான நான்கு உத்தரவுகளையும் எம்.பி.கே.எஸ். பிறப்பித்தது.
இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு வணிக வளாகங்கள் குறிப்பாக உரிமம், கட்டிட அமைப்பு, தூய்மை மற்றும் வணிகப் பதிவு போன்ற அம்சங்களில் சட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.
இந்த நடவடிக்கையில் ஐந்து வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு வளாகங்கள் செயல்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. சோதனையின் முடிவில் கண்டறியப்பட்ட குற்றங்களில் ஒப்புதல் இல்லாமல் கட்டிடங்களை விரிவுபடுத்தியது, விலைப் பட்டியலை வைக்கத் தவறியது மற்றும் வணிகப் பதிவு எண்களைக் காட்டத் தவறியது ஆகியவையும் அடங்கும் என்று எம்.பி.கே.எஸ். தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இந்த சோதனையில் அமலாக்கத் துறை, கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை, சமூக மேம்பாட்டுத் துறை, வர்த்தகப் பிரிவு மற்றும் மலேசிய நிறுவன ஆணையம் (எஸ்.எஸ் எம்.) உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 35 உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது வணிகப் பதிவு விதிமுறைகளை பின்பற்றாத ஒரு வளாகத்திற்கு எதிராக எஸ்.எஸ் எம். ஒரு குற்றப்பதிவை வழங்கியது.


