கோலாலம்பூர், மே 12- பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடான் மாஜூ ஜெயா, ஜாலான் எம் ஜே/7 பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாடிக் கடை என்பது விழுக்காடு சேதமுற்றது.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்றிரவு 9.26 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குனர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு நிலையத்திலிருந்து 18 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்த வேளையில் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்புக் குழுக்கள் உதவிக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த இரண்டு மாடி கடை வீட்டில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.








