ஷா ஆலம், ஏப்ரல் 28: மே 4 ஆம் தேதி அன்று பண்டார் பாரு கிள்ளான் தொகுதியில் சுகாதாரக் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கிள்ளான் பரேட் ஷாப்பிங் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவசப் பரிசோதனைக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ங் ஃபீ அழைப்பு விடுத்தார்.
இந்த கார்னிவலில் டிங்கி தடுப்பூசியின் முதல் டோஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சலுகை முதல் 200 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
"டிங்கி தடுப்பூசியை நான்கு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிலிருந்தே பெற்று கொள்ளலாம். மேலும், இந்த கார்னிவலில் முதல் டோஸ் ஊசி போட்ட பிறகு அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஊசியை எடுத்து கொள்ள வேண்டும்.
"இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிக்கு, முதல் டோஸிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீங்கள் அதைப் பெற வேண்டும். எங்களுடன் இணைந்து செயல்படும் கிளினிக்கில் மலிவான விலையில் அதைப் பெறலாம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
தற்போது அதிகரித்து வரும் டிங்கி சம்பவங்களை தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக டாக்டர் குவா, கூறினார்.
"டிங்கி தடுப்பூசி இருப்பது பலருக்குத் தெரியாது. எனவே, இந்த கார்லிவலில் அதை இலவசமாக அறிமுகப்படுத்த நாங்கள் முன்முயற்சி எடுத்தோம், இல்லையெனில் கிட்டத்தட்ட RM300 விலையில் செலுத்த வேண்டியிருக்கும், ”என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த கார்னிவலில், இரத்த தான பிரச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை குறித்த பேச்சுக்கள் மற்றும் சுகாதார கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும்.


