ஷா ஆலம், ஏப்ரல் 14 -- இன்று அதிகாலை கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது பெண்ணின் கடத்தலில் தொடர்புடையதாக நம்பப்படும் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கிள்ளான், ஜாலான் பாயு திங்கியில் 21 வயதான உள்ளூர் சந்தேக நபரை போலீஸார் அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த முயன்ற வேளையில் அவர் தப்பி ஓட முயன்றதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (துணை இயக்குநர் (உளவுத்துறை/செயல்பாடுகள்) டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
சந்தேக நபர் ஒரு போலீஸ் வாகனத்தின் மீது மோத முயன்றார். அவர் தப்புவதற்கு முன்பு அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. சந்தேக நபருக்கும் சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபரின் வாகனத்தை சோதனை செய்தபோது பகுதி தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் ஒரு பாராங் கத்தி கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சோதனையில் அவருக்கு எந்த குற்றப் பதிவுகளும் இல்லை என்பது தெரியவந்தது என அவர் சொன்னார்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சிரம்பானில் பதின்ம வயதுப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் 20 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரியச் சம்பவத்தில் இந்த சந்தேகப் பேர்வழிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அவர் தெரிவித்தார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் சில நகைகளுடன் 280,000 வெள்ளியைச் செலுத்தியப் பின்னர் கடத்தப்பட்டப் பெண் மறுநாள் (ஏப்ரல் 11) நெகிரி செம்பிலானில் உள்ள செண்டாயனில் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக செண்டாயானில் 21 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 230,000 ரொக்கம் மற்றும் பிற பொருட்களை மீட்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


