ஷா ஆலம், ஏப். 9 - ரமலான் மாதத்தின் கடைசி வாரத்தில் மாநிலத்தின் 12 இடங்களில் நடைபெற்ற சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான மெகா ஏஹ்சான் ஐடில்பித்ரி பெருநாள் விற்பனையின் வழி 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 26 முதல் 28 வரை நடத்தப்பட்ட இந்த விற்பனையில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி சபாக், செமினி மற்றும் தஞ்சோங் சிப்பாட் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டதாக பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி தெரிவித்தார்.
இந்த மெகா விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட பொருட்களில் சுமார் 90 விழுக்காடு விற்பனையாகி விட்டதை நாங்கள் கண்டறிந்தோம். ஒவ்வொரு இடத்திலும் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்தனர்.
இந்த விற்பனையில் கோழி, இறைச்சி, முட்டை மற்றும் அரிசிக்கு அதிக வரவேற்பு இருந்தது என அவர் சொன்னார்.
சந்தையை விட மலிவான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு வாய்ப்பினை வழங்கக்கூடிய இந்த விற்பனை வாய்ப்பை கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொண்டனர் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த மெகா விற்பனைத் திட்டத்தின் வழி 434,000 வெள்ளிக்கும் அதிகமான வருமானம் பதிவு செய்யப்பட்ட வேளையில் இத்திட்டத்திற்கு மாநில அரசு மானியம் 120,000 வெள்ளியை மானியமாக வழங்கியிருந்தது என்று அவர் முன்னதாக கூறியிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சிலாங்கூர் அரசு பண்டிகை கால மெகா விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. வெளி சந்தைகளுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்த விலையில் பொருள்கள் விற்கப்படுகின்றன.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), மீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


