ஷா ஆலம், ஏப். 8 - புத்ரா ஹைட்ஸ் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இரண்டாவது நாளிலிருந்து நேற்று வரை நாள் ஓன்றுக்கு 12 டன் முதல் 18 டன் வரை வீட்டுக் கழிவுகள் மற்றும் மொத்தக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி தாஹிர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் தாமான் ஹார்மோனி மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவில் நேற்று முதல் ரோரோ குப்பைத் தொட்டிகள வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடு பழுதுபார்க்கும் பணிகளைச் செய்து வருவதை நாங்கள் அறிகிறோம். ஆகவே எரிந்த தளவாடங்கள் போன்ற மொத்த கழிவுகளை அகற்றும் வகையில் நாங்கள் ரோரோவை குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறோம்.
சம்பவம் நடந்த இரண்டாவது நாளிலிருந்து எங்கள் பணியாளர்கள் அந்த இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. துப்புரவுப் பணிகளைச் மேற்கொள்ள சுமார் 50 தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
சிலாங்கூர் தன்னார்வலர்கள் (செர்வ்), குழு மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து மெகா துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரம்லி கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் முதலில் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர் ஒரு காம்பாக்டர் லோரி, நீர் தேக்க சுத்தம் செய்யும் இயந்திரம் மற்றும் அதிக சக்தி கொண்ட நீர் பாய்ச்சும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் நாங்கள் கொண்டு வருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.


