ஷா ஆலம், மார்ச் 26 - தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) மின்சார மீட்டரை மாற்றியமைத்த விவகாரத்தில் நபர் ஒருவரை ஏமாற்றியதற்காக மின் பணியாளர் ஒருவருக்கு ஆறு நாட்கள் சிறைத்தண்டனை மற்றும் 3,500 வெள்ளி அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனயும் விதிக்கப்பட்டது.
தனக்கு எதிரான மாற்றுக் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 40 வயதான எஸ். தியாகராஜனுக்கு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது நாசீர் நோர்டின் இத்தண்டனையை விதித்தார்.
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தியாகராஜன் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிடப்பட்டார்.
வணிக வளாகம் ஒன்றில் மாற்றியமைக்கப்பட்ட மீட்டர் தொடர்பில் டி.என்.பி. யிடம் புகார் அளிக்காமலிருப்பதற்கு பிரதியுபகாரமாக 780 வெள்ளியை கொடுக்குமாறு
அதன் உரிமையாளரிடம் கோரியதாக தியாகராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி பூச்சோங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 417 இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த துணை அரசு வழக்கறிஞர் அஸ்மா' ஜம்ரி வழக்கை நடத்தினார். தியாகராஜன் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.


