ஷா ஆலம், மார்ச் 26- அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சுக்மா சிலாங்கூர் 2026 போட்டி சிறப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக போட்டியின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் சிலாங்கூர் பல்வேறு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சுக்மா 2026 போட்டி சிலாங்கூர் விளையாட்டாளர்கள் தங்கள் திறமையைக் வெளிப்படுத்துவதற்கு உரிய களமாக மட்டுமின்றி மாநில மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னதாகவே தொடங்கி விட்டோம். இது சிறப்பான, என்றென்றும் நினைவுக் கூறக்கூடிய மற்றும் தரமான நிகழ்வாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் மிகப்பெரிய விளையாட்டான சுக்மாவின் சிறப்பான ஏற்பாடுகளை சிலாங்கூர் மக்கள் நேரில் காண்பதற்குரிய வாய்ப்பினையும் நமது விளையாட்டாளர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவதற்குரிய சூழலையும் இது வழங்கும் என அவர் சொன்னார்.
இந்த போட்டியை ஏற்று நடத்துவதில் கோலாலம்பூரில் உள்ள சில விளையாட்டு வசதிகளையும் நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள வெலோட்ரோம் எனப்படும் சைக்கிள் பந்தயத் தடத்தையும் நாங்கள் பயன்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.
இது தவிர நீச்சல் குளம், கால்பந்து திடல் போன்ற வசதிகள் நம்மிடம் உள்ளன. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் மினி ஸ்டேடியம் என்ற அளவிலான விளையாட்டரங்குகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு ஒளிபரப்பான ‘டிவிஎஸ் விவாதம்- 2030 ஐ நோக்கிச் சிலாங்கூர், மந்திரி புசாரின் வியூகம்‘ எனும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சுக்மா போட்டிக்கான விளையாட்டாளர்களின் தயார் நிலை குறித்து கருத்துரைத்த அமிருடின், விளையாட்டாளர்களின் திறனை உறுதி செய்வதற்காக பயிற்சித் திட்டங்களை விளையாட்டுச் சங்கங்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றன என்று சொன்னார்.
இப்போட்டியில் சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடும் என எதிர்பார்க்கிறோம். எனினும், விளையாட்டுச் சூழலைப் பொறுத்து இது அமையும் என அவர் கூறினார்.


