ஷா ஆலம், பிப். 28- அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள மரங்களை பராமரிக்கும் மற்றும் கிளைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ள கிள்ளான் அரச மாநகர் (எம்.பி.டி.கே.) 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
வேர் மக்கியது போன்ற காரணங்களால் விழும் அபாயம் உள்ள மரங்களை அடையாளம் காண மரத் தாவர நிபுணர்களை தமது தரப்பு நியமிக்கும் என்று டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் கூறினார்.
அதுமட்டுமின்றி, மரம் நன்றாக வளர்ந்து மிக உயரமாக இருந்தால் அது சுற்றுச் சூழலைப் பாதிக்கக்கூடும். ஆகவே அவற்றின் கிளைகளை கத்தரித்துவிடும் பணியை மேற்கொள்வோம் என அவர் சொன்னார்.
குத்தகையாளர் நியமிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும். பராமரிப்பு மற்றும் மரக் கிளைகளைக் கத்தரிக்கும் சீரமைக்கும் பணிகள் இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இப் பணி முடிவடைய குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை கம்போங் புக்கிட் கூடாவில் மரம் விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர், பாதிக்கப் பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்றும் எனினும் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
காப்புறுதி நிறுவனம் வழங்கும் தொகையை வாரிசுகள் ஒப்புக் கொள்ளா விட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றம் வழங்கும் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் கிள்ளான் கம்போங் புக்கிட் கூடா, ஜாலான் பத்து தீகாவில் வாகனம் மீது மரம் விழுந்ததில் 46 வயதான அஸ்சஹாரி அன்சார் என்ற ஆடவர் இறந்தார்.
வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மகள் நூர் அசிஃபா (வயது 13) எந்த காயமின்றி உயிர் தப்பினார்.


