(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 21- குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் குறிப்பாக உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கும் பைக்கேர்-1000 எனும் திட்டம் கடந்தாண்டுடன் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆகவே, அத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமூக ஊடங்களில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தெளிவுபடுத்தினார்.
கடந்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி இணைய ஊடகம் ஒன்றில் வெளியான பைக்கேர்-1000 விண்ணப்பம் தொடர்பான செய்தி தற்போது மறுபடியும் பகிரப்படும் காரணத்தால் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த செய்தி கடந்த 2024ஆம் ஆண்டிற்கான விண்ணப்பம் தொடர்பானது. இத்திட்டத்திற்கு மார்ச் 1ஆம் தேதிக்குள்ள விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற செய்தியைக் கேட்ட பலர் ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கோரி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்பட்டு வந்த இந்த பைக்கேர்-1000 திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க முன்பணம் வழங்கப்பட்டு வந்தது.
எனினும், கடந்தாண்டுடன் அத்திட்டம் நிறுத்தப்பட்டு மேலும் அதிகமானோர் பயன் பெறும் வகையில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று பாப்பராய்டு விளக்கினார்.
எனவே, தவறான செய்தியால் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது இந்த விளக்கம் தெளிவை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.


