ஷா ஆலம், பிப். 21- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உரிமையாளர்கள் இல்லாத வடிகால், கால்வாய் மற்றும் சாலை பராமரிப்பு தொடர்பான பிரச்சினைக்கு இவ்வாண்டு தீர்வு காணப்படும்.
சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
பல உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தால் வடிகால், கால்வாய் மற்றும் சாலைகளைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமாக விளங்கவில்லை. நாம் விருப்பம் போல் உள்ளே நுழைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது. இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கையை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
தற்போதைக்கு இந்த இடையூட்டுத் திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கான ஒதுக்கீடு வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வழங்கப்படும். இப்பணி இவ்வாண்டு இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று புறநகர் மேம்பாட்டுப் பிரிவின் கீழுள்ள சாலைகள் மற்றும் வடிகால்களை பராமரிப்பது குறித்து சிஜங்காங் தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புறநகர்களில் உள்ள சாலைகள் மற்றும் கால்வாய்களை சீரமைப்பதற்கு இவ்வாண்டு 3 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஷாம் தெரிவித்தார்.
இது தவிர, மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 3 கோடியே 50 லட்சம் வெள்ளி நிதியை புறநகர்களில் உள்ள சாலை மற்றும் கால்வாய்களை பராமரிப்பதற்கு பயன்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு பணியை மாநில கருவூலத்தின் வாயிலாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.


