ஷா ஆலம், பிப். 21- மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அத்தரப்பினருக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி ஊராட்சி மன்றங்களை சிலாங்கூர் மாநில மாற்றுத் திறனாளிகள் நடவடிக்கை மன்றம் (ஓ.கே.யு.) கேட்டுக் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி அமைப்புகளிடமிருந்து தாங்கள் புகார்களைப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டேனியல் அல்-ரஷிட் ஹருண் கூறினார்.
இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி ஊராட்சி மன்றங்களைக் கேட்டுக் கொள்கிறோம். புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் எங்கு தவறு நிகழ்கிறது என்று தெரியவில்லை. மேம்பாட்டாளர்கள் திட்ட வரைபடத்தை சரியாக படிக்கவில்லையா? அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளன என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சுல்தானின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கு அனிஸ் எனப்படும் சிலாங்கூர் பிரத்தியோக சிறார் அமைப்பும், சிலாங்கூர் மாநில பொது படிப்பகமும் இடை மாற்று (டிரான்சிட்) மைய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் டேனியல் கேட்டுக் கொண்டார்.
பிரத்தியேகச் சிறார்களை பராமரிப்பதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்த இடை மாற்று மையத் திட்ட அமலாக்கத்திற்கு தாம் பரிந்துரைப்பதாக அவர் சொன்னார்.
பெற்றோர்கள் சற்று நேரம் ஓய்வெடுப்பதற்கும் மன அமைதி பெறுவதற்கும் இத்தகைய மையங்கள் துணை புரியும். மாற்றுத் திறனாளி பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு மனோவியல் புனர்வாழ்வு மையங்களை ஏற்படுத்தித் தரவும் நான் பரிந்துரைக்கிறேன் என்றார் அவர்.


