ஷா ஆலம், பிப். 21- சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக கிள்ளான் மாவட்டத்தில் குற்றச்செயல் குறியீடு கடந்தாண்டு 12 விழுக்காடு குறைந்துள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
குற்றச் செயல்கள் நிகழும் என கணிக்கப் பட்டுள்ள காலத்திற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள் மற்றும் ரோந்து கார்கள் மூலம் போலீஸ் ரோந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது உட்பட பல்வேறு குற்றத் தடுப்பு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இந்த புள்ளிவிவர குறைவுக்கு பங்களித்ததாக அவர் கூறினார்.
குற்றச் செயல்களின் முறைகளின்படி இந்த நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் குற்றக் குறியீடு குறைவதற்கு குறிப்பாக வீடு புகுந்து கொள்ளையிடுவது மற்றும் வாகனத் திருட்டு குறைவதற்கு இது ஒரு காரணமாகும் என்று சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவரின் பணி ஒப்படைப்பு மற்றும் பணி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
தென்கிழக்காசியாவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் கோலாலம்பூர் , கிள்ளான் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன என்ற இணைய தரவுத்தளத்தின் 'நம்பியோ' குற்றக் குறியீடு 2025 அறிக்கை குறித்து கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலாங்கூரில், குறிப்பாக கிள்ளானில் குற்ற விகிதம் விவரிப்பதற்கான ஆய்வில் பயன்படுத்தப்படும் வகைகள், அளவுகோல்கள் மற்றும் ஆய்வில் பங்கேற்றவர்கள் யார் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ஹூசேன் கூறினார்.
சிலாங்கூரில் குற்றச் சம்பவங்களின் சரிவு குறித்த அறிக்கையை தனது தரப்பு சமர்ப்பிக்கவும் உண்மையான குற்ற விகிதத்தை விளக்கவும் முடியும் என்றும் கூறிய அவர், எனினும், தரவுகளை வெளியிட்டவர்களுடன் தொடர்பில்லாததால் நம்பியோவை அழைக்க தாங்கள் விரும்பவில்லை என்றார்.


