(ஆர்.ராஜா)
கிள்ளான், பிப். 19 - இங்குள்ள தாமான் செந்தோசா நகரமாக அந்தஸ்து
பெறுவதன் மூலம் குற்றச்செயல் மிகுந்த பகுதி என்ற அவப்பெயரிலிருந்து
இக்குடியிருப்பு மீள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் நாட்டிலிலேயே அதிகம் குற்றச் செயல்கள் நிகழும்
பகுதியாக கருதப்பட்ட தாமான் செந்தோசா அந்த அவலத்திலிருந்து
விடுபடுவதற்கு இந்த அந்தஸ்து உயர்வு துணை புரியும் என்று அவர்
சொன்னார்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாமான் செந்தோசா
தற்போது குற்றச்செயல்களிலிருந்து விடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய
அவர், இச்சமூகத்தை சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இம்மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை தாமான் செந்தோசா நகர அந்தஸ்து
பெறுவதையொட்டி இங்குள்ள செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை
மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தாமான் செந்தோசா
விளங்குகிறது. இங்குள்ள மக்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு வேலை
வாய்ப்பு மற்றும் வர்த்தகம் புரிவதற்கான உதவிகளை தொகுதி வாயிலாக
வழங்கி வருகிறோம்.
இந்த தொகுதியில் பெரிய அளவில் செயல்படும் பல தொழிற்சாலைகள்
உள்ளன. அவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. எனினும்
அவர்களில் பலர் தங்களுக்கு பொருத்தமான வேலைகளைத் தேடுவதால்
வேலையின்மை பிரச்சனை நிலவுகிறது.
இந்திய சமூகம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்க எங்களிடம் பல
திட்டங்கள் உள்ளன. வர்த்தகத்தை தொடங்குவோருக்கு தெக்குன்
நேஷனல் மற்றும் மாநில அரசின் ஹிஜிரா சிலாங்கூர் போன்ற திட்டங்கள்
வாயிலாக் கடனுதவிக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என அவர்
சொன்னார்.
இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் வருமானப் பற்றாக்குறை
முக்கியமானதாக உள்ளது. ஆகவே, அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட
வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. உதவி நாடி
எங்கள் அலுவலகத்திற்கு வருவோருக்கு எவ்வாறு உதவி செய்வது என்பது
குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறிய அளவில் அங்காடி வியாபாரம் செய்ய விரும்புவோருக்கு
முறையான அனுமதிகளைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட உதவிகளை
வழங்குவதில் கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்கள் உதவி
வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே. தாமான் செந்தோசா நகர அந்தஸ்து பெறுவதை முன்னிட்டு
இங்குள்ள ராஜ ராஜேஸ்வரி ஆலயம் உள்பட மூன்று வழிபாட்டுத்
தலங்களுக்கு நிலங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளத் தகவலையும் குணராஜ்
இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
ஆலயத்திற்கு பின்புறம் இருந்த நிலத்தை மண்டபம் அமைப்பதற்காக
ஆலய நிர்வாகத்தினர் நீண்ட காலமாக கேட்டு வந்த நிலையில் தற்போது
அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


