ஷா ஆலம், பிப். 12- கிள்ளான் பண்டார் பார்க்லண்ட்ஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகுந்த பாராங்கத்தியேந்திய ஆடவன் இரண்டு பெண்களிடம் சுமார் 50,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பினான்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்ததாக
தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் கூறினார்.
பாராங் கத்தியுடன் அந்த வர்த்தக வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளையன் 59 வயது பெண் வாடிக்கையாளரை நோக்கி வேகமாகச் சென்றுள்ளான்.
அந்த மாதுவின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்கப் போவதாகவும் ஒத்துழைக்க மறுத்தால் உதைக்கப் போவதாகவும் கொள்ளையன் மிரட்டியுள்ளான் என அவர் தெரிவித்தார்.
பின்னர் அக்கொள்ளையன் மளிகைக் கடை ஊழியரான 28 வயதுப் பெண்ணை அணுகியபோது அவர் பயத்தில் தான் அணிந்திருந்த நெக்லஸை அவ்வாடவன் மீது வீசியுள்ளார்.
சந்தேக நபர் நகைகளுடன் வெளியில் காத்திருந்த மற்றொரு சந்தேக நபரின் காரில் ஏறித் தப்பினான் என்று அவர் குறிப்பிட்டார்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற சாம்பல் நிற எஸ்.யு வி. வாகனம் போலி எண் பட்டையைக் கொண்டிருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இரு பெண்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, முகமூடி அணிந்த ஆடவன் கத்தியுடன் மளிகைக் கடைக்குள் நுழைந்து இரண்டு பெண்களிடம் கொள்ளையடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.


