கோல குபு பாரு, பிப். 10 - சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கம் 2025
தொடங்கப்பட்டது முதல் சிலாங்கூருக்கு வருகை புரிந்த வெளிநாட்டு
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடு அதிகரித்துள்ளதாக
சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்
கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை புரிந்த சுற்றுப்பயணிகள்
எண்ணிக்கை சராசரி 30 விழுக்காடாக இருந்த வேளையில் கடந்த டிசம்பர்
மாதம் அது சற்று உயர்வைப் பதிவு செய்தது என்று அவர் சொன்னார்.
வழக்கமாக 70 விழுக்காட்டு உள்நாட்டினரும் 30 விழுக்காட்டு
வெளிநாட்டினரும் சிலாங்கூருக்கு வருகை புரிவர் என நாங்கள்
கணித்திருந்தோம். எனினும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 35 விழுக்காடாக
அதிகரிப்பைக் கண்டது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சாதகமானப் போக்கு நீடித்தால் இவ்வாண்டு முழுவதும்
உள்நாட்டினருக்கு இணையாக வெளிநாட்டிரின் வருகையும் அமையும் என
எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள தாசேக் பிரேசர் வேலியில் நடைபெற்ற 2025 மீன்பிடி
விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் டூரிசம் சிலாங்கூர் தலைமைச்
செயல்முறை அதிகாரி சுவா யீ லிங்கும் கலந்து கொண்டார்.
இதனிடையே, இந்த மீன்பிடி விழாவுக்கு பொது மக்கள் மத்தியில்
சிறப்பான ஆதரவு கிடைத்ததாகக் கூறிய அவர், இதில் 500 பேர் கலந்து
கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பதிவு செய்தவர்கள்
எண்ணிக்கை 710ஆக உயர்வு கண்டது என்றார்.
தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு சிறப்பான
இடத்தைப் பிடித்துள்ளதோடு சுற்றுலா ஈர்ப்பு மையமாக உருவாகும்
சாத்தியத்தையும் கொண்டுள்ளது என்றார் அவர்.
ஐம்பது வெள்ளி நுழைவுக் கட்டணத்தைக் கொண்ட இந்த மீன்பிடி
போட்டியில் 20,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகள் வெற்றியாளர்களுக்கு
வழங்கப்பட்டன.


