ஷா ஆலம், ஜன. 31- மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
கோத்தா அங்கிரிக் தொகுதி நிலையிலான இந்த சிலாங்கூர் சாரிங் திட்டம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இங்குள்ள செக்சன் 2, சூராவ் அல் அன்சோரில்நடைபெறவுள்ளது.
உடல் பரிசோதனையோடு இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் உள்ளிட்ட சோதனைகளை உள்ளடக்கிய இலவச சுகாதார இயக்கத்தில் பங்கேற்று பயனடைவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செலங்கா செயலியில் உள்ள தொடக்க மதிப்பீட்டு பாரத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் இடர் மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்குபெற விரும்புவோர் அந்த செயலியில் முன்னதாக பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு
2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு 7,000 பேர் பயனடைந்ததாகவும் அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


