ஷா ஆலம், டிச 17: ஹிஜ்ரா கூட்டுறவு (கோஹிஜ்ரா) இவ்வாண்டு 50 லட்சம் வெள்ளி விற்பனை மதிப்பை பதிவு செய்துள்ளதாக அதன் பொது நிர்வாகி டத்தோ முகமது ஷூக்ரி இஸ்மாயில் தெரிவித்தார்.
உணவு மற்றும் பானங்கள், சில்லறை விற்பனை, உபசரணை மற்றும் சுற்றுலா வணிகங்கள் மூலம் இவ்வாண்டு 30 லட்சம் வெள்ளி விற்பனையை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இது தாண்டிவிட்டதாக அவர் சொன்னார்.
மேலும், சிஜாங்காங்கில் கோஹிஜ்ரா தனது சொந்த மொத்த விற்பனைச் சந்தையையும் திறந்துள்ளது. எங்கள் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்பு பொருள்கள் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, சீனா, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் துருக்கி போன்ற அனைத்துலகச் சந்தைகளிலும் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளன என்று அவர் சொன்னார்.
அடுத்தாண்டு ஒரு கோடி வெள்ளி விற்பனை மதிப்பை அடைய கோஹிஜ்ரா இலக்கு வைத்துள்ளது. இது ஒரு சவாலாக இருந்தாலும் அனைத்து தொழில்முனைவோரின் ஆதரவு மற்றும் ஊக்கமளிக்கும் ஒருங்கிணைப்புடனும் இந்த இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
நேற்றிரவு இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மந்திரி பெசார் வழங்கிய சிலாங்கூர் புத்தாக்க கூட்டுறவு சிறப்பு விருதை கோஹிஜ்ரா சார்பாக பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கோஸ்விப் மலேசியா கூட்டுறவுக் கழகத்திற்கு கூட்டுறவு நடவடிக்கை நிலைத்தன்மைக்கான சிறப்பு விருதையும் உசாஹவான் சபாக் பெர்ணம் பெர்ஹாட்டிற்கு பிரகாச எதிர்கால கூட்டுறவுக்கான சிறப்பு விருதையும் டத்தோஸ்ரீ அமிருடின் வழங்கினார்.


