சபாக் பெர்ணம், டிச. 16- அடுத்தாண்டு அனுசரிக்கப்படவிருக்கும் 2025
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை முன்னிட்டு
(டி.எம்.எஸ்.2025) அதிகரிப்பைக் காணும் என எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு
தயாராக இருக்கும்படி சுற்றுலாத் துறையினர் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சிறப்பான
சேவையை வழங்கும் அதே வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும்
முக்கியத்துவம் தரும்படி சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
கவர்ச்சிகரமான சலுகைகள் வழஙகப்படுவதன் காரணமாக அடுத்தாண்டு
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஹோட்டல்,
ஹோம் ஸ்தேய் நடத்துநர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர்
உள்ளிட்ட சுற்றுலாத் துறை சார்ந்த அனைத்து துறையினரும் தயார்
நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூருக்கு வரும் சுற்றுப்பயணிகள் இனிமையான நினைவுகளுடன்
தாயகம் திரும்ப வேண்டும் என்பது மாநில அரசின் விருப்பமாக
உள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கும் அதிகப்பட்ச முன்னுரிமை
வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஃபார்ம் ட்ரிப் எனப்படும் ஊடகவியலாளர்களுக்கான சிலாங்கூரின் தென்
பகுதி சுற்றுலா திட்டத்தின் போது டத்தோ இங் இதனைத் தெரிவித்தார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை முன்னிட்டு எண்பது
லட்சம் சுற்றுப்யணிகளை அடுத்தாண்டு ஈர்க்க சிலாங்கூர் இலக்கு
நிர்ணயித்துள்ளதாகவும் அவர்களில் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டினராக
இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த இயக்கத்தை முன்னிட்டு சுங்கை பெசார், சுங்கை
ஹாஜி டோரானியில் உள்ள தனது சாக்லெட் கடையை விரிவுபடுத்துவது
உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை தாம் மேற்கொண்டு வருவதாக
லாமான் சோக்கோ நிறுவனர் முகமது ஃபர்ஹான் அப்துல் சமாட் கூறினார்.
மண்பாண்டத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வி.ராமதாஸ் கூறுகையில்,
சுற்றுப்பயணிகளை வரவேற்கத தாம் தயராக உள்ளதோடு
மண்பாண்டங்களை நவீன முறையிலும் பாரம்பரிய முறையிலும் செய்வது
தொடர்பான நுட்பங்களைக் கற்றுத் தரவும் தயாராக உள்ளதாக
தெரிவித்தார்.


