ஷா ஆலம், டிச. 10 - கிள்ளான் நகரில் தூய்மையை உறுதி செய்வதற்கு
கிள்ளான் அரச மாநகர் மன்றத்திற்கு (எம்.பி.டி.கே.) கூடுதல் நிதி ஒதுக்கீடு
வழங்குவது உள்ளிட்ட பல ஆக்ககரமான திட்டங்களை மாநில அரசு
முன்னெடுத்துள்ளது.
கிள்ளான் அரச மாநகரின் வளர்ச்சி தொடர்பில் அண்மையில் நடைபெற்ற
சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டம் மற்றும் மாநில
ஆட்சிக்குழு கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக ஊராட்சி மன்றத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
பல வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அத்திட்டங்கள் யாவும் ஒரே நாளில் முற்றுப்பெற்று விடும்
என கூறமுடியாது. கிள்ளான் ஆற்றைக் பொறுத்த வரை அந்த ஆற்றில்
தற்போது நிலைமை மேம்பட்டு வருவதோடு நீர் சுத்தமானதாகவும்
உள்ளது என அவர் சொன்னார்.
எனினும், தற்போதைய நிலை குறித்து நாம் மனநிறைவு கொண்டு
விடமுடியாது. கிள்ளான் ஆற்றில் நீரின் தரத்தை உயர்த்துவதற்கு மாநில
அரசு சிலாங்கூர் மெரிடைம் கேட்வேய் நிறுவனத்துடன் தொடர்ந்து
ஒத்துழைப்பை நல்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இங்கு அதிகரித்து வரும் தொழில்பேட்டைகள் காரணமாக அந்நிய
நாட்டினரின் எண்ணிக்கையும் பெருகுவதும் கிள்ளான் நகரில்
தூய்மையின்மைப் பிரச்சனை எழுதுவதற்கு காரணமாக உள்ளது என்று
அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆகவே, கிள்ளான் நகரில் தூய்மையைப் பராமரித்து அதனை அழகமான
நகராக உருவக்குவதில் முதலாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும்
உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கிள்ளானில் அதிக தொழில்பேட்டைகள் உள்ள காரணத்தால் இங்கு
250,000க்கும் அதிகமான அந்நிய நாட்டினர் உள்ளனர். எனவே,
இப்பிரச்சினையை ஊராட்சி மன்றங்களால் மட்டும் களைய முடியாது,
மாறாக, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
என்றார் அவர்.


