ஷா ஆலம், நவ. 26 - ஊராட்சி மன்ற நிலையில் வரை வெள்ள அபாயம்
உள்ள இடங்களை வரைபடமிடுவதன் வாயிலாக வெள்ள மேலாண்மை
வியூகத்தை சிலாங்கூர் மேம்படுத்துவதாக அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
வழக்கமாக வெள்ளம் தொடர்பான தகவல்களை வடிகால் நீர் பாசனத்
துறையும் (ஜே.பி.எஸ்.) மாவட்ட அலுவலகமும்தான் வெளியிடும். வெள்ள
அபாயம் தொடர்பில் விரிவான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில்
இனி ஊராட்சி மன்றங்களும் அதில் இணைத்துக் கொள்ளப்படும் என்று
அவர் தெரிவித்தார்.
வரைபடமிடுவது மற்றும் ஊராட்சி மன்றங்களின் கீழுள்ள வடிகால்களை
நிர்வகிப்பதும் இதில் அடங்கும். திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களில்
உள்ள உள்வடிகால் முறையை ஊராட்சி மன்றங்களே நிர்வகிக்கின்றன
என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது இஷாம்
இத்தகவலை வெளியிட்டார். செமெந்தா தொகுதியில் வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாதது மற்றும் கிள்ளான் ஆற்றில்
திட்டமிடப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் குறித்து அத்தொகுதி
உறுப்பினர் நோர் நஜ்ஹான் முகமது சாலே முன்னதாக
கேள்வியெழுப்பியிருந்தார்.
அடுத்தாண்டு கிள்ளான் ஆற்றின் நெடுக வெள்ளத் தடுப்பு தொடர்பான இரு
திட்டங்களை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு 13 கோடி வெள்ளியையும்
மத்திய அரசு 30 கோடி வெள்ளியையும் வடிகால் மற்றும் நீர் பாசனத்
துறைக்கு ஒதுக்கியுள்ள தகவலையும் இஷாம் வெளியிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் 45 வெள்ளத் தடுப்புத்
திட்டங்களில் 11 திட்டங்கள் கிள்ளான் ஆற்றோரம் அமைந்துள்ளன என்றார்
அவர்.


