ஷா ஆலம், நவ 25: முதலீட்டாளர்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்பீட் சிலாங்கூர் கொள்கையானது, பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஆயிரக்கணக்கான தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்குள் 100,000 உயர் வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற சிலாங்கூர் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க இந்தக் கொள்கை இருப்பதாக டத்தோ மந்திரி புசாரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"முன்னதாக, டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 100,000 உயர்தர வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதியை எடுத்துக்காட்டினார். எனவே அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்.
"நாங்கள் இனி RM4,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் தரும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. ஏனெனில் அது வசதியாக வாழ்வதற்கு போதாது. நீண்ட கால தீர்வை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்," என்று ஜே ஜே டெனிஸ் ஹை சிலாங்கூர் பேட்டியின் போது கூறினார்.
ஸ்பீட் சிலாங்கூர் கொள்கையானது செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர்கள், விண்வெளி, மின்சாரம் மற்றும் மின்னணுவியல், உணவு சேவைகளை மட்டுமே மையப்படுத்திய தொழில்களை உள்ளடக்கியது என்று ஜே ஜே மேலும் கூறினார்.
பட்டதாரிகளுக்கு அதிக வருமானத்தை வழங்க முடியும் என்பதாலும், உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருவதாலும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றார்.
"இந்தக் கொள்கையின் மூலம், முதலீட்டாளர்கள் விரைவாக தொழில் தொடங்க முடியும், மேலும் பட்டதாரிகள் நிரந்தர வேலைகளைப் பெறும்போது கிக் வேலைகளில் தங்கள் ஓய்வு நேரத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை," என்று அவர் கூறினார்.


